தெலுங்கில் அதிரி புதிரி ஹிட்டடித்த பிச்சைக்காரன் 2..!!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள பிச்சைக்காரன் 2 படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அங்குள்ள பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தமிழில் ‘பூ’ சசி இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனி, சாட்னா டைட்டஸ் நடிப்பில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. சில மாதங்கள் கழித்து ’பிச்சகாடு’ என்கிற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

அதற்கு தெலுங்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு அளித்தனர். தெலங்கானா மற்றும் ஆந்திராவில் கோடிக்கணக்கில் வசூல் செய்தது. இதனால் விஜய் ஆண்டனிக்கு தெலுங்கு மாநிலங்களில் நல்ல மார்க்கெட்டும் உருவானது. அவருடைய மற்ற தமிழ் படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகின.

இந்நிலையில் விஜய் ஆண்டனி நடித்து இயக்கியுள்ள ‘பிச்சைக்காரன் 2’ படம் கடந்த 19-ம் தேதி வெளியானது. முதற்கட்டமாக இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பிச்சைக்காரன் தெலுங்குப் படம் மாபெரும் வெற்றி பெற்றதால், அதனுடைய இரண்டாம் பாகத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

அதன்படி, பிச்சகாடு 2 என்கிற பெயரில் தெலுங்கிலும் கடந்த 19-ம் தேதி வெளியானது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் முதல்நாளில் மட்டும் ரூ. 5 கோடி வசூல் சாதனை செய்துள்ளது இந்த படம். கடந்த இரண்டாண்டுகளில் ஒரு டப்பிங் படம் தெலுங்கில் முதல்நாளில் ரூ. 5 கோடி வசூலிப்பது இதுவே முதல்முறையாகும். 

இன்னும் ஒரு வாரம் பிச்சகாடு 2 படத்துக்கு இதே வரவேற்பு தொடரும் பட்சத்தில், வார இறுதியில் ரூ. 20 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரங்கள் கூறுகின்றன. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் 2 தெலுங்குப் பதிப்பு முதல்நாளில் ரூ. 3 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.