‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் டீசர்  வெளியீடு..! குறி வச்சா… இரை விழனும்…!

 

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரஜினி தனது 170 ஆவது படத்தில் நடித்து வருகிறார். தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாஸில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தை சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் புகழ்பெற்ற டிஜே ஞானவேல் இயக்குகிறார். 600 கோடி வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்த ஜெயிலர் படத்தை தொடர்ந்து இப்படம் உருவாகி வருவதால் ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் பல விருதுகளை அள்ளிய ஜெய் பீம் பட இயக்குனர் இந்த படத்தை இயக்குவதாலும் ரசிகர்கள் தலைவர் 170 படத்தின் அப்டேட்டுகளுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரஜினியின் 73வது பிறந்த தினத்தை (12.12.2023) முன்னிட்டு தலைவர் 170 படத்தின் டைட்டில்  டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

அந்த வகையில் தலைவர் 170 படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. டீசரில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் ரஜினிகாந்த் பெரிய லத்தியை கையில் எடுத்துக்கொண்டு யாரையோ அடித்து விசாரிக்க கிளம்புவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறி வச்சா இரை விழனும் என்னும் வசனம் இடம் பெற்று இருக்கிறது. யாரோ ஒரு பெரிய தலைக்கு ரஜினி ஸ்கெட்ச் போட்டு வேட்டையாட செல்வது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டீசர் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.