பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் சைஸ்மோர் மரணம்... திரையுலகினர் இரங்கல்!

 

1989-ல் ஆலிவர் ஸ்டோன் இயக்கத்தில் வெளியான ‘பார்ன் ஆன் தி ஃபோர்த் ஆஃப் ஜூலை’ படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் டாம் சைஸ்மோர். அதனைத் தொடர்ந்து சேவிங் பிரைவேட் ரியான், ஹீட், பிளாக் ஹாக் டவுன், நேச்சுரல் பார்ன் கில்லர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில் டாம் சைஸ்மோர்க்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் டாம் சைஸ்மோர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மூளை ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டாம் சைஸ்மோர் கடந்த 3-ம் தேதி காலமானார். இந்த செய்தியை அவரது மேலாளர் சார்லஸ் லாகோ அறிக்கை மூலம் உறுதி செய்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “61 வயதான நடிகர் தாமஸ் எட்வர்ட் சைஸ்மோர் (டாம் சைஸ்மோர்) நேற்று  (மார்ச் 3) பர்பாங்கில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடனும் வருத்தத்துடனும் நான் அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.