சர்ச்சையில் சிக்கியுள்ள ஜெயிலர் படம்..! அறிவித்தபடி ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகுமா ?

 

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த 6-ம் தேதி வெளியானது. அனிருத் இசையில் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ள காவாலா என்ற பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடல் குறித்து விமர்சனங்கள் அதிகம் இருந்தாலும் அதே அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவும் தவறவில்லை. இதனையடுத்து இந்தப் படத்திலிருந்து ஹுக்கும் என்ற பாடல் இன்று (ஜூலை 17) வெளியாகிறது.

இந்த நிலையில் இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. மலையாளத்தில் சக்கிர் மாடத்தில் இயக்கத்தில் தயன் ஸ்ரீநிவாசன் நடிப்பில் ஜெயிலர் என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்காக ஜெயிலர் என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளதால் கேரளாவிலும் இந்தப் படத்துக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் கேரளாவில் மட்டும் வேறு பெயரில் வெளியாகுமா அல்லது மலையாள படத்தின் தலைப்பு மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.