ஆர்.ஆர்.ஆர் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகர்களா..??

தெலுங்கில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் முதலில் தமிழில் உருவாகுவதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் தமிழ் நடிகர் பெரியளவில் ஆர்வம் காட்டாததால், ஆர்.ஆர்.ஆர் படம் தெலுங்கில் தயாராகியுள்ளது. 
 

ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு ஆஸ்கர் கிடைத்துள்ள சூழலில், அந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்த கதாபாத்திரங்களில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இந்த படம், அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த பாடலுக்கான பிரிவில் விருது வென்றுள்ளது. இதனால் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தில் கதாநாயகர்களாக ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதேபோன்று கதாநாயகியாக ஆலியா பட், ஸ்ரேயா நடித்திருந்தனர். மிகப்பெரியளவில் வசூல் சாதனை இந்த படம், முன்னதாக கோல்டன் குளோப், பீப்பிள் சாய்ஸ் விருதுகள் போன்ற சர்வதேசளவிலான விருதுகளை வென்றது.

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா மற்றும் கார்த்தியை இணைந்து நடிக்கவைக்க ராஜ்மவுலி முயற்சித்துள்ளார். ஆனால் அது நடக்காமல் போனதை அடுத்து அல்லு அர்ஜுன் மற்றும் அஜித் குமாரை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்க முயற்சித்துள்ளார்.

அதுவும் கைக்கூடி வராமல் போனது. அதற்கு பிறகு தான் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய கதாபாத்திர தேர்வு உறுதிசெய்யப்பட்ட பிறகு தான், படத்துக்கு ‘ஆர்.ஆர்.ஆர்’ (ராஜமவுலி, ஜூனியர் என்.டி.’ஆர்’ மற்றும் ராம் சரண்) என்று பெயர் சூட்டியுள்ளனர்.

ஒருவேளை முதல் இரண்டு வாய்ப்புகளில் ஏதாவது ஒன்று கைக்கூடி இருந்தால், இந்நேரம் ஆஸ்கர் விருது வென்ற படத்தில் ஒரு தமிழ் நடிகர் இருந்திருப்பார் என்கிற பெருமை தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும். அது நடக்காமல் போய்விட்டது. எனினும் இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனால் தமிழ் நடிகரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இருக்கிறார் என ரசிகர்கள் பெருமிதம் கொண்டு வருகின்றனர்.