அகரம் விதை திட்டத்திற்கு இது 15-ஆம் ஆண்டு : நடிகர் சூர்யா..!
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களை தேர்வு செய்து அவர்களுடைய உயர் கல்விக்கு உதவி செய்து வருகிறது என்பதும் இந்த அறக்கட்டளையின் உதவியால் படித்த மாணவர்கள் பலர் தற்போது நல்ல நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு அமைப்பு 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சமூக சேவை செய்து வருவது என்பது மிகப்பெரிய சாதனை என்று கருதப்படும் நிலையில் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பெருமையுடன் சூர்யா கூறியிருப்பதாவது:
அகரம் விதைத் திட்டத்திற்கு இது 15-ஆம் ஆண்டு. 12-ஆம் வகுப்பு வரையில் கிராமப்புற அரசு பள்ளியில் படித்த, 5,287 மாணவர்கள் 350க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை அமைத்து கொடுத்திருக்கிறது விதைத் திட்டம். 3,440 முன்னாள் மாணவர்கள், மற்றும் 1,850 இந்நாள் மாணவர்களும் இருக்காங்க.
இத்தனை மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க தொடர்ச்சியாக உறுதுணையாக இருக்கும் தன்னார்வலர்கள், கல்லூரிகள், நன்கொடையாளர்கள், பயிற்சியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். ஊர் கூடித் தேர் இழுப்பது போன்று தான் அகரம் பணிகள்.
மீண்டும் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். நன்றி.!