ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு நிறுத்தம்- காரணம் இதுதான்..!

 

பிரமாண்ட பொருட்செலவில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகியோருடைய நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. சமூக இடைவெளியுடன் இருப்பது, பொது கூடங்களில் மக்கள் கூடுவது, திரையரங்கங்களுக்கு செல்வது என பல்வேறு தினசரி நடைமுறைகளில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதில் சினிமாவும் ஒன்று. 

மீண்டும் கொரோனாவால் ஏற்பட்டு வரும் பிரச்னைகளை உணர்ந்துகொண்ட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கொரோனா பரவல் காரணமாக வெறும் 50 பேர் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் பல்வேறு படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மகேஷ் பாபு - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம், சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘ஆச்சார்யா’ ஆகிய படங்களில் முன்னதாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் ராஜமவுலி இயக்கி வந்த ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுவிட்டது. வரும் ஆகஸ்டு இரண்டாம் வாரத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. தற்போது இருக்கும் சூழலில் திட்டமிட்டப்படி இந்த படத்தை வெளியிட முடியுமா என்கிற குழப்பத்தில் படக்குழு உள்ளது.

இதற்கிடையில் ஹைதராபாத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களின் உத்தரவை ஏற்று அண்ணாத்த படக்குழுவும் படப்பிடிப்பை நிறுத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.