இதனால் தான் என்னால் வருமான வரி கட்ட முடியவில்லை- புலம்பும் கங்கனா...!

 

வாழ்க்கையில் முதன்முறையாக வருமான வரி செலுத்த முடியாமல், அதற்கு வட்டி கட்டும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என நடிகை கங்கனா ரணாவத் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ. 12 கோடி ஊதியம் பெறுகிறார். தமிழில் அவர் நடித்து முடித்துள்ள தலைவி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அவர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கங்கனா ரணாவத்துக்கு கிடைக்கும் ஊதியத்தில் 45 சதவீதம் பணத்தை வரியாக செலுத்தி வருகிறார். கடந்தாண்டு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பதால், அவருக்கு எந்தவித ஊதியமும் கிடைக்கவில்லை. வேலை இல்லாததால் வருமான வரி செலுத்த கஷ்டப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், வாழ்க்கையில் முதல் தடவையாக வருமான வரியின் பாதி தொகையை செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளேன். வரி செலுத்த தாமதமாவதால் அதற்கு வட்டி விதித்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். ஆனால் வரி செலுத்துபவர்களுக்கு இது மிகவும் கடினமான காலமாக அமைந்துள்ளது என்று கங்கனா வீடியோவில் கூறியுள்ளார்.