பொன்னியின் செல்வன் கதைக்கு மணிரத்னம் வேண்டாம் என்றேன்- துரைமுருகன்..!!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இசைவெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன், இயக்குநர் மணிரத்னம் குறித்து பேசியுள்ளது, தமிழ்த் திரையுலகில் மிகுந்த கவனமீர்த்துள்ளது.
 

மிகுந்த பொருட்செலவில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, கடந்த 29-ம் தேதி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் துரைமுருகன், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாராதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சி குறித்து தயாரிப்பாளர் சுபாஷ்கரன் என்னிடம் பேசினார். அப்போது நான், அந்த நாவலை படித்துள்ளீர்களா? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு இல்லை என்று பதிலளித்தார். நான் உடனே நீங்கள் அதை படமாக எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

ஆனால், அவர் பிடிவாதமாக எடுத்தே தீருவேன் என்றேன். தொடர்ந்து, யார் இயக்குநர்? என்று கேட்டேன். மணிரத்னம் படத்தை இயக்குவதாக சொன்னார். அவர் எப்போதும் இருட்டிலேயே படம் எடுப்பவர், அதனால் பொன்னியின் செல்வன் கதைக்கு அவர் சரிபட்டு வரமாட்டார் என்று தெரிவித்தேன். 

எனினும், என் பேச்சை கேட்காமல் சுபாஷ்கரன், பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துவிட்டார். இப்போது அந்த படம் வரலாற்றில் நிற்கும்படியாக ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. நான் படத்தை பார்த்த பிறகு அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். படத்தை பார்த்து வீட்டில் இருந்தபடியே நான் சல்யூட் வைத்தேன்.

பொன்னியின் செல்வன் நாவலை நான் அதிகப்பட்சமாக 5 முறை படித்துள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் வந்தியத்தேவன் தான். அவரது சொந்த ஊர் எனது தொகுதிக்குட்பட்டது. அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.