தொலைக்காட்சி புகழ் ராக்ஸ்டார் ரமணியம்மாள் திடீர் மரணம்..!!

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கெடுத்து பிரபலமான மூதாட்டி ராக்ஸ்டார் ரமணியம்மாள் உடல்நலக்குறைவு காரணமான உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

பிரபலமான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சரிகமபா’. இந்நிகழ்ச்சி பல சீசன்கள் கலந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஒளிப்பரப்பான சீசன் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் மூதாட்டி ரமணியம்மாள்.

இவர் இந்நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்கு முன்னதாகவே, கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘காதல்’ படத்தில் இடம்பெற்ற ”தண்டட்டி கருப்பாயி...”,  ஹரிதாஸ் படத்தில் வந்த “வெள்ளக்குதிரை..” போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

இதையடுத்து தான் அவர் ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியில் பங்கெடுத்தார். அவர் சிறுவயதில் இருந்தே இசை கற்று வளர்ந்த இவர், குடும்ப சூழல் காரணமாக இசை பயில்வதை விட்டுவிட்டார். எனினும் திருமணமான பிறகு, பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்து மேடையில் பாடல்களை பாடியுள்ளார். 

சரிகமப நிகழ்ச்சிக்கு பிறகு சண்டக்கோழி 2 படத்தில் இடம்பெற்ற :செங்கரட்டான் பாறையிலே...”, காப்பான் படத்தில் வந்த “சிறுக்கி..” போன்ற பாடல்களை பாடினார். சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான ‘பொம்மை நாயகி’ படத்தில் கூட ரமணியம்மாள் நடித்திருந்தார்.

இந்நிலையில் 63 வயதான ரமணியம்மாளுக்கு சில நாட்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை திடீரென்று காலமானார். அவருடைய மறைவு திரையுலகு சேர்ந்தவர்களை பேரதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.