மாமன்னன் படம் குறித்து வடிவேலு!

 

வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வடிவேலு, “இவ்வளவு நாட்களாக ஒரு காமெடி நடிகராக நடித்து வந்தேன். எத்தனையோ பல படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் சிம்பதி கேரக்டரில் நடித்துள்ளேன். ஆனா, இந்தப் படம் முற்றிலும் வேறுபட்டது. ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘சந்திரமுகி’ படத்தில் ஒப்பந்தமான சமயம் அது.

அப்போது, இப்படி ஒரு படம் பண்ணலாம் என்று உதயநிதி சொன்னார். படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார் என்றார். அவர் படம் பார்த்துள்ளீர்களா? என கேட்டார். இல்லை என்றேன். உடனே அன்று இரவே மாரி செல்வராஜின் இரண்டு படங்களையும் பார்த்துவிட்டேன். அடுத்தநாள் அவர் படத்தின் ஒன்லைன் சொல்லும்போதே நன்றாக இருந்தது. அந்தக் கதையில் நடிப்புக்கு நிறைய வாய்ப்பிருந்தது.

ஆனால், நகைச்சுவைக்கு வாய்ப்பில்லை. இந்த கதையின் ‘மாமன்னன்’ யார் என்றால் இயக்குநர் மாரி செல்வராஜ் தான். படத்தை ஒப்புக்கொண்ட உதயநிதி ‘மன்னாதி மன்னனன்’. நான் ஒரு குறுநில மன்னன் போல. தனக்கான வலியை மாரி செல்வராஜ் கச்சிதமாக கடத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியும் கொஞ்சம் பிசகினாலும் காமெடியாகிவிடும். என்னை சிரிக்கக் கூடாது என கன்டிஷன் போட்ட ஒரே படம் இந்தப் படம் தான்.

காமெடி வடிவேலுவுக்கும், சீரியஸ் வடிவேலு இடையே போராட்டம் நடந்தது. ஒரே மீட்டரில் நடித்தேன். படம் பார்த்துவிட்டு இரவு 11 மணிக்கு தமிழக முதல்வர் என்னை தொடர்பு கொண்டு பாராட்டினார். ‘வடிவேலு பிரமாதம்… பிரமாதம்… பிரமாதம்… என்றார்’ என்றார். ரஜினி பாராட்டினார். கமல் மேடையில் பாராட்டினார். படத்தில் நான் மட்டும்தான் ஹீரோ என்பது தவறானது. எல்லோரும் ஹீரோதான். குறிப்பாக மாரி செல்வராஜுக்குதான் அத்தனையும் பொருந்தும். அவரின் வயதுக்கு மீறிய படம் இது” என்றார்.