எக்கச்சக்க கெட்ட வார்த்தைகள்- தணிக்கை செய்யப்பட்ட விடுதலை..!!

காட்சியில் இடம்பெற்றிருந்த கெட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டதை அடுத்து விடுதலை படத்துக்கு திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது.
 

வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. மொத்தம் இரண்டு பாகங்களாக இந்த படம் தயாராகியுள்ளது. வரும் மார்ச் 31-ம் தேதி விடுதலை படத்தின் முதல் பாகம் திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு நேற்று படத்தை சென்சார் செய்யும் பணிகள் நடைபெற்றன.

அதன்படி விடுதலை படம் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் ஓடுவதாகவும், படத்துக்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ள விவரங்கள் வெளியாகியுள்ளது. விடுதலை படத்தில் எந்தவிதமான கத்திரிப்பு காட்சிகளும் இல்லை. எனினும், படத்தில் நிறைய இடங்களில் கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. 

அதுதவிர சில வன்முறை காட்சிகள் உள்ளன. அந்த காரணங்களை முன்வைத்து விடுதலை படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு வாரியம் ‘ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்கிற நாவலை தழுவி விடுதலை படம் உருவாகியுள்ளது. சூரி, விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் மூலம் நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, கதாநாயகனாக சினிமாவில் கால்பதிக்கிறார்.

படத்திற்கான பாடல்களை இளையராஜா இசையமைத்துள்ளார். தமிழ் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படத்துக்கான முன்பதிவு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. மேலும் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன.