தீயாக பரவும் வீடியோ..! தளபதி விஜய் தொடங்கியிருக்கும் கட்சிப் பெயரில் இருக்கும் பிழை..!
தளபதி விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய கட்சியின் பெயரில் தவறு இருப்பதாக வைரல் தமிழ் ஆசிரியர் கதிரவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ‘தமிழக வெற்றி கழகம்’ என்றில்லாமல் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என வரவேண்டும் என்று விளக்கமளித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.