பிச்சைக்காரன் 2 பட ரிலீஸ்- விஜய் ஆண்டனி எடுத்த திடீர் முடிவு..!!

பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் படத்தில் ரிலீஸ் தேதியை இயக்குநரும் நடிகருமான விஜய் ஆண்டனி மாற்றி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

கடந்த 2016-ம் ஆண்டு ‘பூ’ சசி இயக்கத்தில் வெளியான படம் ‘பிச்சைககாரன்’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த இந்த படத்தில், சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், தீபா ராமானுஜம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் தமிழில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. வெறும் ரூ. 3 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ. 50 கோடி லாபம் ஈட்டியது. அதுதவிர, தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த பதிப்பு தமிழை விடவும் பயங்கர ஹிட்டானது. தெலுங்கு ரசிகர்கள் பிச்சைக்காரன் படத்தை பெரியளவில் கொண்டாடினர்.

தற்போது 7 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி எழுதி, இயக்கியுள்ளார். இது அவர் இயக்கத்தில் வெளியாகும் முதல் படமாகும். கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்துள்ள நிலையில், காவ்யா தாபர் மற்றும் ஹரீஷ் பெரடி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14-ம் தேதி பிச்சைக்காரன் 2 வெளியாவதாக இருந்தது. ஆனால் அந்த தேதியில் லாரன்ஸ் நடித்துள்ள ‘ருத்ரன்’ படம் வெளிவருகிறது. அதுதவிர மேலும் சில படங்களும் வெளியிடப்படவுள்ளன. இதன்காரணமாக பிச்சைக்காரன் 2 பட வெளியீடு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.

அதாவது விஜய் ஆண்டனி இந்த படத்தை எந்த போட்டியும் இல்லாமல் தனியாக வெளியிட விரும்புகிறார். அதனால் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை ஏப்ரல் 14-ம் தேதிக்கு பதிலாக, மே மாதம் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.