‘விருந்து’ திரைப்பட விமர்சனம் - "சூப்பரான சஸ்பென்ஸ் திரில்லர் விருந்து"..!
விருந்து படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக களம் இறங்கியிருக்கும் அர்ஜுன், இதில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே வலம் வருகிறார். அவருக்கு ஜோடியோ, டூயட் பாடலோ இல்லை என்றாலும், தனது ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்து படைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, தன்னை சுற்றி நடக்கும் மர்மங்களை கண்டு ஆரம்பத்தில் பயந்தாலும், பிறகு அதற்கான விடை தேடி பயணிக்கும் காட்சிகளில் அதிரடியாக நடித்து அசத்தியிருக்கிறார்.
நாயகி நிக்கி கல்ராணியின் அப்பா மற்றும் அம்மா அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இதனால், நிக்கி கல்ராணிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க, அந்த பாதுகாப்பையும் மீறி அவரை கொலை செய்ய மர்ம கும்பல் முயற்சிக்கிறது. அவர்களிடம் இருந்து நிக்கி கல்ராணி தப்பித்தாலும், அந்த கும்பல் தொடர்ந்து அவரை துரத்த, அடர்ந்த வனப்பகுதியில் அந்த கும்பலிடம் நிக்கி கல்ராணி சிக்கிக் கொள்கிறார். அவர்களிடம் இருந்து நிக்கி கல்ராணியை காப்பாற்றும் அர்ஜுன், வனப்பகுதியில் உள்ள தனது வீட்டில் அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஆனால் நிக்கி கல்ராணி அர்ஜுனையே கொலை செய்ய முயற்சிக்க, அதன் பிறகு என்ன நடந்தது? அர்ஜுனை அவர் கொலை செய்ய முயற்சிப்பது ஏன்? நிக்கி கல்ராணியை சுற்றி நடக்கும் மர்ம பின்னணிக்கு காரணம் யார்? போன்ற கேள்விகளுக்கான விடைகளை படு சுவாரஸ்யமாகவும், பரபரப்பான திருப்பங்களோடும் சொல்வது தான் ‘விருந்து’.
படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் அழைத்துச் செல்லும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் வி.டி.ஸ்ரீஜித், இறுதி வரை அடுத்தது என்ன நடக்கும்? என்ற கேள்வியோடு ஒவ்வொரு காட்சியையும் எதிர்பார்ப்புடன் பயணிக்க வைத்திருக்கிறார்.
பத்திரிகை செய்திகளை மையமாக வைத்துக்கொண்டு ஒரு நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் தாமர கண்ணன், படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் காட்சிகளையும், திரைக்கதையையும் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
அடுத்தடுத்து நடக்கும் இரண்டு கொலைகள், அதனை சுற்றி நடக்கும் சில மர்மமான சம்பவங்களை வைத்துக்கொண்டு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர், படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘விருந்து’ சூப்பரான சஸ்பென்ஸ் திரில்லர் விருந்து.