சண்முக பாண்டியனுக்கு அழைப்பு விடுத்த விஷால்..!

 

கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகினார். இவர் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார்.

இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனயடுத்து நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த இரங்கல் கூட்டத்தில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பங்கேற்று விஜயகாந்த் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், “வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த உதவி இயக்குனர்களுக்கு உணவளித்தவர். உணவில் எந்த பாரபட்சமும் பார்க்ககூடாது என எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு ஊக்கமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். அவர் பாதையில் நாங்களும் அந்த முயற்சியில் ஈடுபட்டோம். பல நடிகர்கள் வளர வாய்ப்புக் கொடுத்தவர் விஜயகாந்த்.

அந்த வகையில் சண்முக பாண்டியனிடம் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். உன்னுடைய படத்தில் எப்போதாவது நானும் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசை இருந்தால் நான் வருகிறேன். என்னை பயன்படுத்திக்கொள்ள உனக்கு விருப்பம் இருந்தால் நானும் உன்னுடன் தூணாக இருந்து படத்தில் நடித்து தருகிறேன்” என்று பேசினார்.