நாங்க எல்லாம் தமிழனா பொறந்தது தப்பா சார்..! இணையத்தை தெறிக்க விடும் ‘ரிபெல்’ டிரைலர்..!
உண்மை சம்பவங்களைத் தழுவி அதிரடி ஆக்சன் படமாகத் தயாராகி இருக்கும் ரெபல் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு வெளியிட்டார். மேலும் இந்த படத்திற்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி இந்த ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது ரெபெல் திரைப்படம். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் கடந்து சாதனை படைத்திருக்கிறது.இதற்காக வெளியிடப்பட்டுள்ள காணொளியில் இடம் பெறும் வசனங்களும், அதிரடி காட்சிகளும், ஜி வி. பிரகாஷின் ஆக்சன் அவதாரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கேரளாவில் உள்ள கல்லூரி ஒன்றில் ஜிவி பிரகாஷ் சேரும் நிலையில் அங்குள்ள மலையாள பெண்ணை அவர் காதலிக்கிறார். அந்த பெண்ணிடம் காதலை சொல்ல ஜிவி பிரகாஷ் தயங்கி கொண்டிருக்கும் நிலையில், உனக்கு பிடித்த பெண்ணிடம் எந்த மொழியில் வேண்டுமானாலும் காதலை சொல்லலாம், ஆனால் உண்மையாக சொல்ல வேண்டும் என்று அவரது நண்பர்கள் அறிவுரை கூற அந்த பெண்ணிடம் தனது காதலை கூறுகிறார்.
இதனை அடுத்து ஒரு மலையாள பெண்ணை தமிழன் காதலிப்பதா? என அங்குள்ள மலையாளவாசிகள் ஜிவி பிரகாஷை அடித்து நொறுக்க அதன் பின் ஏற்படும் பிரச்சனைகள் அந்த பிரச்சினைகளை எப்படி ஜிவி பிரகாஷ் சந்திக்கிறார் என்பதுதான் ‘ரிபெல்’ படத்தின் கதை என்பது ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.
முதல் பாதி இனிமையான காதல் கதையாகவும் இரண்டாவது பாதி அதிரடி ஆக்சன் கதையாகவும் அமைந்துள்ள இந்த திரைப்படம் ஜிவி பிரகாஷ் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’பிரேமலு’ என்ற படத்தின் நாயகி மமிதா பாஜூ நாயகியாக இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஆதித்ய பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் அமைந்துள்ள இந்த படம் வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.