என்ன நடிகர் விமலுக்கு வந்த சோதனை..! கடனாளியான ’களவாணி’ விமல்! 

 

 தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான விமல், ‘களவாணி’ படம் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்தவரின் அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இதற்கிடையே, தமிழ் சினிமாவில் தவறவிட்ட தனது இடத்தை மீண்டும் பிடிப்பதற்காக முயற்சித்த நடிகர் விமல், சொந்தமாக படம் தயாரித்து அதில் நாயகனாக நடிக்க முடிவு செய்தார். அதன்படி, இயக்குநர் ஜி.பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நாயகனாக நடித்த ‘மன்னர் வகையறா’ படத்தை தானே தயாரிக்கவும் செய்தார். அதற்காக அரசு பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கோபி என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கியதோடு, படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் கடனை திருப்பித் தருவதாக விமல் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை, என்று சொல்லப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடிகர் விமல் மீது கோபி காசோலை வழக்கு தொடர்ந்தார். இதில் இருந்து தப்பிப்பதற்காக கோபி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேல் ஆகியோர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை நடிகர் விமல் அளித்தார்.

மேலும், நடிகர் விமல் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தயாரிப்பாளர்கள் சங்கம், விமல் மற்றும் கோபி இருவருக்கும் இடையே சமரசம் ஒப்பந்தம் ஏற்பட வழி செய்தது. அதன்படி,  2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.3 கோடியை ஓராண்டு காலத்திற்குள் திருப்பித்தருவதாக விமல் சமாதான ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.

ஓராண்டு கடந்தும் பணம் தராததால் 2022-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோபியிடம் உள்ள ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ரூ.3 கோடியை 18 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என நடிகர் விமலுக்கு உத்தரவிட்டுள்ளது.