என்ன விஜய் சேதுபதி சார் இது..? நீங்க சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு?

 

விஜய் நடித்த மாஸ்டர், ரஜினிகாந்த் நடித்த பேட்ட, கமல்ஹாசன் நடித்த விக்ரம், ஷாருக்கான் நடித்த ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார் நடிகர் விஜய் சேதுபதி.

அதே நேரத்தில் அவர் ஹீரோவாக நடித்து வந்த படங்கள் தொடர் தோல்வி அடைந்த நிலையில் அவரது 50வது படமான மகாராஜா மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்றும் நல்ல கதை உள்ள படங்களில் ஹீரோவாகவே நடிப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்த நிலையில் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் அவர் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தெலுங்கு திரை உலகில் ’ஹிட்’ மட்டும் ’ஹிட் 2’ ஆகிய இரண்டு படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் ’ஹிட் 3’ என்ற படம் உருவாக இருப்பதாகவும் பிரபல தெலுங்கு நடிகர் நானி இந்த படத்தை தயாரித்து அவர் ஹீரோவாக நடித்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ’கேஜிஎஃப் 2’ படத்தில் நாயகியாக நடித்த ஸ்ரீநிதி  ஷெட்டி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் வில்லனாக நடிக்க முதலில் ரானாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.