என்னாச்சு..! அமரன் பட நிறுவனத்துக்கு இழப்பீடு நோட்டீஸ் - ஒரு கோடி இழப்பீடு வேணும்..!

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அமரன்’. இந்தப் படத்தில் சாய் பல்லவி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அமரன் படத்தின் ஒரு காட்சியில் காட்டப்பட்ட மொபைல் எண்ணால், நிஜ வாழ்க்கையில் அந்த எண்ணை கொண்ட பொறியியல் மாணவர் வாகீசன் கடும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். இதற்காக அவர் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு ₹1.1 கோடி இழப்பீடு கோரி சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

"படம் வெளியான நாளில் இருந்து என் வாழ்க்கை பல மாற்றங்களை சந்தித்துள்ளது, அவை சுகமானவை அல்ல. அந்த எண்ணுக்கு தினமும் ஏராளமான அழைப்புகள் வருவதால் நான் தூங்கவும் முடியவில்லை; படிக்கவும் முடியவில்லை. இந்த அழைப்புகள் எனது தனி வாழ்வை முற்றிலும் பாதித்துள்ளன," என்று வாகீசன் தனது மன வேதனையை வெளிப்படுத்தினார்.

அந்த மொபைல் எண் அவர் சமீபத்தில் வாங்கியதாகவும், எந்த நேரத்தில் எந்த அழைப்பும் வரும் என கணிக்க முடியாத அளவுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வாகீசன் ₹1.1 கோடி இழப்பீடு கோரியுள்ளதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் தடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.அமரன் பட குழுவின் தரப்பில் இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை. இது சமூக ஊடகங்களில் விவாதங்களுக்கு இடம் கொடுத்து, இப்படத் தரப்பின் பதிலை அதிகம் எதிர்பார்க்க வைக்கிறது.