“நல்ல படமோ, மோசமான படமோ - எதையும் நேர்மையாக விமர்சிக்கிறோம்... கொந்தளித்த ரிவியூவர் பிரசாந்த்...! 

 

நடிகர் விஷால் அண்மையில் வெளியிட்ட கருத்தில், “முதல் மூன்று நாட்கள் விமர்சனங்களைத் தவிர்க்கலாம்” என கூறியதையடுத்து, பிரபல யூடியூப் விமர்சகர் பிரசாந்த் தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார்.

“நல்ல படமோ, மோசமான படமோ - எதையும் நேர்மையாக விமர்சிக்கிறோம். அந்த விமர்சனத்திற்கான பொறுப்பையும் ஏற்கிறோம். ஆனால், சில படங்கள் மக்களுக்கு இன்னும் சேராமல் போய்விடுகிறது. காரணம்? ப்ரோமோஷனில் தவறு, அல்லது எதிர்பார்ப்புகள் தவறானவையாக இருக்கலாம்.” என்று கூறியிருந்தார். 

விஷால் கூறிய “நல்ல படம் எடுத்தால் எந்த விமர்சனமும் தாக்கமளிக்காது” என்ற கருத்துக்கு, பிரசாந்த் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதே நேரத்தில், “ஒரு கெட்ட படத்தை 100 விமர்சகர் சேர்ந்து நல்ல படமா சொல்லினாலும் அது ஓடாது. ஒரு நல்ல படத்தை விமர்சனங்கள் மட்டும் அடக்க முடியாது” என்ற உண்மையையும் வலியுறுத்துகிறார்.

இன்று சில சிறிய படங்கள், யூடியூப் விமர்சனங்கள் மூலம் மக்களிடம் சென்று வெற்றியை பெற்றுள்ளன. இது விமர்சனங்களின் சக்தியை காட்டுகிறது. “விமர்சகர் கெட்ட படம் சொன்னார் என்பதற்காக வசூல் பாதிக்கப்படவில்லை. உண்மையில் மக்கள் தான் இறுதி தீர்ப்பு எழுதுகிறார்கள்,” என அவர் குறிப்பிட்டார்.

படங்களை ஹைப் செய்து, அதன் உள்ளடக்கம் வேறாக இருக்கும்போது, அது மக்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது. இது விமர்சனங்களுக்கு வழிவகுக்கிறது. “விமர்சகர் இல்லை என்றால், பொது ஜனங்கள் தாமாகவே தங்களது கருத்துகளை பதிவு செய்வார்கள்,” என்றார் பிரசாந்த். தயாரிப்பாளர்களின் நலனும், நடிகர்களின் சம்பளச் சூழலும் தற்போது விவாதத்துக்குள்ளாகியுள்ளது. “நடிகர்கள் கடினமாக உழைக்கிறார்கள் என்பதைக் கூறுகிறார்கள், ஆனால் தயாரிப்பாளர்களின் நஷ்டம் பற்றி யாரும் பேசுவதில்லை,” என அவர் கேள்வி எழுப்புகிறார்.

இந்நிலையில், ரிவியூ தடை, ரிவியூ நேரம் கட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் விவாதிக்கப்படலாம். ஆனால், விமர்சனங்கள் சினிமா உலகத்திற்கான எதிர்மறையான சக்தியாக இல்லை என்பது இதன் முக்கியமான முடிவு என பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.