”விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது” கே.வி. ஆனந்த் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்..!

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் பிரபல ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பால் திடீரென காலமான நிலையில் அவருடைய மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் மோகன்லால், இயக்குநர் பாரதிராஜா, நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் மற்றும் முன்னணி ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் இன்று சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிறந்தது.

அவருடைய திடீர் மரணத்தால் தென்னிந்திய திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கே.வி.ஆனந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,

“வருந்துகிறேன் நண்பா!

திரையில் 
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!

வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!

என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!

இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?

விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!

ஒளியாய் வாழ்வாய்
இனி நீ.”

என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ இந்தியாவின் தலைச்சிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பேரன்பு கொண்ட கே.வி. ஆனந்த்-ன் மறைவு நம்ப முடியவில்லை. மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும், திரையுலகத்திற்கும், ஆழ்ந்த இரங்கம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கே.வி. ஆனந்த் மறைவுக்கு பல்வேறு முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தவிர, ரசிகர்களும் அவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்