ரஜினிகாந்த், லோகேஷுடன் கூட்டணி சேரும் யாஷ்..!!

கே.ஜி.எஃப் வரிசைப் படங்களை தொடர்ந்து யாஷ் அடுத்து நடிக்கும் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், அவரது புதிய படம் தொடர்பான தகவல் வெளியாகி கோலிவுட் சினிமாவில் வைரலாகி வருகிறது.
 

கன்னடத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதில் ஹீரோவாக நடித்த யாஷ் ஒரே இரவில் தேசியளவில் பிரபலமான நடிகராக மாறிவிட்டார். அதையடுத்து வந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமான ஹிட் கொடுத்தது. வெறும் ரூ. 150 கோடிக்குள் எடுக்கப்பட்ட இரண்டு படங்களும் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தன.

இவ்விரு படங்களுக்கு பிறகு புதிய பட வாய்ப்புகளை எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்து வருகிறார் யாஷ். இதனால் அவர் அடுத்து என்ன படத்தில் நடிக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கி காணப்படுகிறது. நடிகர் யாஷின் அடுத்த படம் தொடர்பான பல்வேறு செய்திகள் தொடர்ந்து இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 171’ படத்தில் யாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த படத்தை கேஜிஎஃப் மற்றும் காந்தாரா போன்ற படங்களை தயாரித்த ஹொம்பாலே ஃப்லிம்ப்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதை படக்குழு தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் கேஜிஎஃப் படத்தை தொடர்ந்து, யாஷுக்கு ஒரு மாஸான கதாபாத்திரம் தேவைப்படுகிறது. அதற்கு தீனி போடும் வகையில் ஏதேனும் கதாபாத்திரம் அமையும் பட்சத்தில், அவர் எந்த படத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என கன்னட ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.