யூடியூபர் இர்ஃபானுக்கு அபராதம்.. எவ்வளவு தெரியுமா?
யூடியூபர் இர்ஃபான் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வார் என்பதும் சமீப காலமாக அவர் ஒரு விபத்தை ஏற்படுத்தியது, அவரது மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிவித்தது, உள்ளிட்ட சிக்கல்களில் மாட்டிக் கொண்ட நிலையில் தற்போது முறையில்லாத நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் அவர் பைக் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை அடுத்து அவருக்கு 1500 ரூபாய் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அபராதித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் பிரசாந்த் தனது ‘அந்தகன்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது தொகுப்பாளினி உடன் பாண்டி பஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் உலா வந்தபடியே கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது இருவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் பிரசாந்துக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று யூடியூபர் இர்ஃபான் உயர் ரக இருசக்கர வாகனம் ஒன்றின் டெஸ்ட் டிரைவிங் செய்தபோது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வாகனத்தில் நம்பர் பிளேட் விதிகளை மீறி இருந்ததாகவும் அதுமட்டுமின்றி இர்பான் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவருக்கும் சென்னை காவல்துறையினர் 1500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.