புதிய அரசியல் கட்சியைத் துவங்குகிறாரா நடிகர் விஷால் ?

 

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமான விஷால், தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற தன் 34-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, தான் இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் - 2 பணிகளில் ஈடுபட இருக்கிறார். 

இந்நிலையில், நடிகர் விஷால் விரைவில் புதிய அரசியல் கட்சியைத் துவங்குவார் எனக் கூறப்படுகிறது. காரணம், விஷால் தன் ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கம் எனப் பெயர் மாற்றம் செய்து அனைத்து மாவட்டத்திற்கும் நிர்வாகிகளை நியமித்துள்ளாராம். இதன் அடுத்தகட்டமாக விரைவில், அரசியல் கட்சி ஒன்றை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நடிகர் விஷால் கடந்த 2017-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். ஆனால், இறுதி நேர குளறுபடிகளால் அவர் போட்டியிடவில்லை. அப்போது, கட்சி துவங்காமலே அரசியலில் ஆர்வம் காட்டினார். தற்போது, அதை முறையாக செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.