உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் பலி.. இந்தியாவின் இருமல் மருந்துதான் காரணம்?

 

உத்தர பிரதே மாநிலம் நொய்டாவில் தலைமையகத்தை கொண்டுள்ள மரியன் பயோடெக் மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் டாக்-1 மேக்ஸ் (Dok-1 Max) என்ற இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்து வெளிநாடுகளிலும் விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில், உஸ்பெகிஸ்தானில் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக 21 குழந்தைகள் டாக்-1 மேக்ஸ் இருமல் மருந்தை அருந்தியதாக கூறப்படுகிறது. இதில், 18 குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மூன்று முதல் ஏழு நாட்களுக்கு என, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு தடவை 2.5 மி.லி. என்ற தர அளவில்  முதல் 7 நாள்களுக்கு இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்ததாகவும், அதை குடித்த பின்னர் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், எத்திலீன் கிளைக்கால் என்ற ரசாயனம், டாக்-1 மேஸ்க் இருமல் மருந்தில் கலந்திருப்பதாகவும், இதுவும் குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, உஸ்பெகிஸ்தானில் மரியான் பயோடெக் நிறுவனத்தின், டாக்-1 மேக்ஸ் இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணையை நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக காம்பியாவில் இந்தியாவின் மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்து 66 குழந்தைகள் உயிரிழந்த குற்றச்சாட்டு எழுந்த நிலையில்  தற்போது உஸ்பெகிஸ்தானில் அதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.