மாணவிகளை குறிவைத்து இயங்கி வந்த பாலியல் தொழில் நெட்வொர்க்- தரகர் தலைமறைவு..!!
 

கல்லூரி மாணவிகளை குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த கும்பல் கையும் களவுமாக கைது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்.
 

வாடகைக்கு வாகனங்களை எடுத்து கமிஷன் பெறுவது போல, கல்லூரி மாணவிகளை குறி வைத்து இயங்கி வந்த பெரும் பாலியல் தொழில் நெட்வொர்க்கை காவல்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

சென்னை எழும்பூரில் மசாஜ் செண்டர் என்கிற பெயரில் ஆண்களை வரவழைத்து அதிகளவும் பணம் கேட்டு மிரட்டுவதாக பெரியமேடு காவல்நிலையத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மசாஜ் செண்டரில் இருந்த ஜெயப்பிரதா என்கிற கல்லூரி மாணவியை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் தனது காதலனை சந்திக்க வந்ததாக கூறி நாடகமாடினார். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் அந்த பெண் உண்மையான விவரங்களை கூறினார்.  அதன்படி, ஜெயப்ரதா 12-ம் வகுப்பு படிக்கும் போது, ஃபேஸ்புக் மூலமாக பிரகாஷ் என்கிற நபர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார்.

ஆரம்பத்தில் நட்பாக இருந்த இவர்கள், பிறகு காதலர்களாக மாறியுள்ளனர். அப்போது தான் ஒரு பாலியல் தரகர் எனவும், இந்த தொழிலுக்கு வந்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்று கூறி ஜெயப்ரதாவுக்கு பணத்தாசை காட்டியுள்ளார் பிரகாஷ். அதற்கு ஒப்புக்கொண்ட ஜெயப்ரதாவை பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும், நிறைய பணம் கொடுத்து பிரபல பொறியியல் கல்லூரியில் படிக்க அவர் சீட்டும் வாங்கி கொடுத்துள்ளார். 

அங்கு தன்னிடம் பழகும் மாணவிகளின் பணத் தேவையை புரிந்துகொண்டு, அவர்களுக்கு கடன் கொடுத்து உதவுவது போல உதவியுள்ளார் ஜெயப்ரதா. அவர்களால் பணத்தை உரிய முறையில் கொடுக்க முடியாத போது, அவர்களுக்கு மேலும் பணம் கொடுத்து, இதுபோல நிறைய சம்பாதிக்கலாம் என்று கூறி பாலியல் தொழிலில் ஈடுபத்தியுள்ளார். 

இதுபோன்ற கடந்த 3 ஆண்டுகளாக பிரகாஷ், ஜெயப்ரதா மற்றும் இருவரின் கூட்டாளி பிரேம் தாஸ் உள்ளிட்டோர் நிறைய பணம் சம்பாதித்து சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர். பெரும் தொழிலதிபர்களின் பாலியல் இச்சைக்கு மாணவிகளை ஈடுபடுத்தி, அதன்மூலம் கிடைக்கும் ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ. 40 ஆயிரத்தில், வெறும் ரூ. 3 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு மோசடியும் செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தற்போது ஜெயப்ரதா மற்றும் கூட்டாளி பிரேம் தாஸை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முக்கிய தரகரான பிரகாஷ் தலைமறைவாகிவிட்டார். அவரை மும்முரமாக தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜெயப்ரதா மற்றும் பிரேம் தாஸின் செல்போன்களை கைபற்றப்பட்டு, அதிலிருக்கும் போன் நம்பர்கள் மற்றும் ஜி.பே பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.