ரூ.3,00,00,000/- கோடி பிணையத் தொகை கேட்ட கடத்தல் காரர்கள்! சுற்றி வளைத்த காவல்துறை!

 

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் பகுதியில் அரிசி ஆலைகள் அநேகம். இங்கு அரிசி ஆலை உட்பட பலதரப்பட்ட தொழில்களை நடத்தி வருபவர் ஈஸ்வரமூர்த்தி. இவருடைய மகன் சிவபிரதீப். சிவபிரதீப் காரில் காங்கேயம் அருகே பாப்பினி-வீரசோழபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே டாடா சுமோ காரில் வந்த ஏழு பேர் அவரை கடத்திச் சென்றனர்.
அந்த ஏழு பேரில் டிரைவர் மட்டும் காக்கி உடையில் இருந்துள்ளார்.

தங்களை போலீஸ் என்று கூறி, தாங்கள் ஓட்டிவந்த டாட்டா சுமோ காரில் சிவபிரதீப்பையும், அவரது ஓட்டுநரையும் ஏற்றிக் கொண்டு, பிரதீப் சென்ற இனோவா காரையும் உடன் கொண்டு சென்றனர்.
பின்னர் சிவபிரதீப்பின் தந்தைக்கு போன் செய்து 3 கோடி ரூபாய் கேட்டனர். அவரும் 3 கோடி ரூபாய் பணம் கொடுத்து மகனை மீட்டு வந்தார். அதன்பிறகு காங்கேயம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

காரில் சென்று கொண்டிருந்தபோது, கடத்தல்காரர்கள் பேசியதை வைத்து, கடத்திய நபர்களின் பெயரையும் சிவபிரதீப் போலீசில் சொல்லியுள்ளார்.
தனிப்படை அமைத்து கடத்தல்காரர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் இச்சம்வம் குறித்து இதுவரை சக்திவேல், அகஸ்டின், பாலாஜி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேரை மதுரையிலும், ஒருவரை கிருஷ்ணகிரியிலும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
அவர்களிடம் இருந்து 1 கோடியே 65 லட்சம் ரூபாயை கைப்பற்றியுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.