கடன் திருப்பித் தராததால் பெண் குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டிய கொடுரம்!

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியில் வசித்து வருபவர் ரகு. இவருக்கு அஞ்சுகம் என்ற மனைவியும், 17 வயதில் ரித்விகா, சாத்விகா என்ற மகள்களும், 15 வயதில் ரிஸ்கா என்ற மகளும் உள்ளனர். அஞ்சுகம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார்.

கூலித்தொழிலாளியான ரகுவுக்கு கொரோனா காலத்தில் வேலை எதுவும் கிடைக்கததால் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் இப்பிரச்சனையை சமாளிக்க கேஷிடி ராஜா என்பவரிடம் 18 மாதத்திற்கு முன்பு வட்டிக்கு ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி அப்போதைக்கு செலவை சமாளித்துள்ளார்.

ரகுவிற்கு வேலை கிடைக்காததால் வட்டி கட்ட இயலாமல் தவித்த நிலையில், கொடுத்த கடனை கேட்டு கேஷிடி ராஜா தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரகு மற்றும் அஞ்சுகம் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் பிள்ளைகள் இருந்துள்ளனர்.

அவர்களுடன் ரகுவின் உறவினரின் மகளான யோகேஸ்வரி என்ற பெண்ணும் இருந்துள்ளார். பெற்றோர்கள் வாங்கிய கடனை கொடுக்கும் வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று தகராறு செய்த கேஷிடி ராஜா, வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு சென்றார்.

வீட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கேஷிடி ராஜாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.