”நான் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி” அசரடிக்கும் வலிமை கிளிம்ப்ஸ்..!

 
வலிமை பட போஸ்டர்

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் புதிய அப்டேட் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்துள்ளார் அஜித். இதற்கான ஷூட்டிங் பணிகள் கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்று வந்தது. இதையடுத்து படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் சென்னையில் துவங்கியுள்ளன.

நேற்று இந்த படம் தொடர்பான அப்டேட் விரைவில் வெளியாகும் என்கிற தகவல் வெளியாகி வந்தது. அதற்கிடையில் ட்விட்டரில் பதிவிட்ட தயாரிப்பாளர் போனி கபூர், வலிமை படம் வரும் 2022 ஜனவரி பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் படத்தின் உருவாக்கப் பணிகள் ஏன் தாமதமாகி வந்தன என்பது புரியவந்துள்ளது. நவீன தொழில்நுட்பம் கொண்டு பிரமாண்டமான கமர்ஷியல் படமாக வலிமை உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் கிளிம்ப்ஸ் காட்சிகளை பார்த்தவரையில் சர்வதேச தரத்திலான சண்டைக் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதை யூகிக்க முடிகிறது. அதேபோல பல்வேறு அதிவேகமான, ஆற்றல்மிகுந்த பைக்குகளை அஜித் ஓட்டும் காட்சிகளும் மிரட்டலாக வந்துள்ளன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வெளியான ஒரு மணிநேரத்தில் சுமார் 10 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. அதேபோல, முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளதால், தமிழ் மட்டுமில்லாத பிறமொழி பார்வையாளர்களையும் இந்த கிளிம்ப்ஸ் காட்சி ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web