தற்கொலை செய்து கொண்ட நடிகை பௌலின் தீபா பயன்படுத்திய 3 செல்போன்கள், 1 டேப் மீட்பு!!
ஆந்திராவை சேர்ந்தவர் பௌலின் ஜெசிகா (29) சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்தார். ‘அநீதி கதைகள்’ என்ற குறும்படத்தின் மூலம் அறிமுகமான பௌலின், துப்பறிவாளன் படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விதார்த் நடித்த ‘கார்பன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு ‘வாய்தா’ படத்தில் கதநாயகியாக நடித்தார். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பௌலின் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அதில், “நான் ஒருவரை காதலித்து வந்தேன். அந்த காதல் கைகூடவில்லை. இதனால் எனக்கு வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என உருக்கமான கடிதமும் நடிகை பௌலின் தீபா எழுதி வைத்து இருந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட நடிகை பௌலின் தீபாவின் காணாமல் போன ஐபோன் மீட்கப்பட்டுள்ளது. நடிகை தீபா தற்கொலை செய்து கொண்டபோது கதவை உடைத்து பார்த்த பிரபாகரனிடமிருந்து ஐபோனை போலீசார் மீட்டனர். மொத்தமாக நடிகை பௌலின் தீபா பயன்படுத்திய 3 செல்போன்கள், ஒரு டேப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. தடையங்கள் எதுவும் அழிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக தடையவியல் ஆய்வுக்கு போலீசார் உட்படுத்தியுள்ளனர்.