அல்லு அர்ஜுன் படத்தில் 6 ஹீரோயின்களா..?

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்த படத்தின் ஹீரோயின்கள் பற்றி தான் அதிகம் பேசப்படுகிறது.
அட்லி தன் முதல் டோலிவுட் படத்தில் மூன்று ஹீரோயின்களை நடிக்க வைக்கிறார் என முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில் மூன்று அல்ல 6 ஹீரோயின்கள் என கூறப்படுகிறது. தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மிருணாள் தாகூர், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மற்றும் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே ஆகியோர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என பேச்சு கிளம்பியது.
முன்னதாக ஹாலிவுட்டில் அசத்தும் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸிடம் கேட்டதாகவும் அவர் நடிக்க மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. அட்லி அப்படி என்ன கதையை தான் படமாக்கவிருக்கிறார், 6 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என தெலுங்கு ரசிகர்கள் ஏற்கனவே கேள்வி எழுப்பத் துவங்கிவிட்டார்கள்.
அப்பா, இரண்டு மகன்கள் என மூன்று அல்லு அர்ஜுனை திரையில் பார்க்கலாம் என கூறப்பட்டது. அப்பா, இரண்டு மகன்ளா, அப்படி என்றால் விஜய்ணாவை வைத்து எடுத்த மெர்சல் படத்தை தான் தெலுங்கில் ரீமேக் செய்கிறாரோ அட்லி என தமிழ் ரசிகர்கள் பேசினார்கள்.
அட்லி என்னவோ என் படம் பற்றி யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசுங்கள். நான் படப்பிடிப்பை துவங்குவதற்கான வேலையில் பிசியாக இருக்கிறேன் என தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர் இப்படி எதுவும் சொல்லாமல் வேலை செய்வதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ராஜா ராணி படம் மூலம் இயக்குநரான அட்லி, பாலிவுட் சென்றபோது தன் முதல் பட ஹீரோயினான நயன்தாராவையும் உடன் அழைத்துச் சென்றார். ஷாருக்கானை ஹீரோவாக வைத்து அட்லி இயக்கிய முதல் இந்தி படமான ஜவான் மூலம் நயன்தாராவை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தார்.
ஜவான் படத்தின் வசூல் ரூ. 1000 கோடியை தாண்டி பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் அட்லி பக்கம் திரும்பியது. யார் இந்த தமிழ் இயக்குநர் என அனைவரும் வியந்தார்கள். அதே போன்று தன் முதல் தெலுங்கு படத்திலும் தனக்கு ராசியான ஹீரோயினான நயன்தாராவை நடிக்க வைப்பார் அட்லி என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் நயன்தாரா இல்லாவிட்டாலும் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த முகமான சமந்தாவை நடிக்க வைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்கும் வாய்ப்பே இல்லையாம்.
பாலிவுட்டை போன்றே டோலிவுட்டிலும் ரூ. 1000 கோடி வசூல் கொடுப்பாரா அட்லி என தற்போதே கேள்வி எழுந்துவிட்டது. ஒரு படம் எத்தனை கோடி வசூல் செய்கிறது என்பதை பார்க்காமல் படத்தை பார்த்து ரசிக்குமாறு பிரபலங்கள் கூறி வருகிறார்கள். ஆனாலும் ரசிகர்களின் கவனம் எல்லாம் வசூல் மீது தான் இருக்கிறது.