90'ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!!
‘காதல் தேசம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றதை அடுத்து, நடிகர் அப்பாஸுக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. விஐபி, மின்னலே, பூச்சூடவா, பூவேலி, படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், திருட்டுப்பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்துள்ள அப்பாஸ், இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அப்பாஸுக்கு திருட்டு பயலே படத்திற்கு பிறகு, வெளியான எந்த படமும் வெற்றி பெறாததால், பட வாய்ப்புகள் குறைந்ததால், கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில், நடிகர் அப்பாஸ் தனது ஃபேஸ்புக்கில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், மருத்துவமனையில் இருக்கும்போது கவலைகள் மிக மோசமானவையாக இருக்கும். ஆனால் நான், சில பயங்களை சமாளிக்க முயற்சிக்கிறேன். நான் என் மனதை மேம்படுத்த முயற்சிக்கிறேன். அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை கண்ட ரசிகர்கள் என்னாச்சு அப்பாஸுக்கு எனகேள்வி கேட்டு வருகின்றனர். அப்பாஸ், என்ன அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற எந்த விவரமும் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.