சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த நடிகர் மாதவன்..!!
கடந்த 2000-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் மாதவன். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மின்னலே, டும் டும் டும் ஆகிய படத்திலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம், ஆய்த எழுத்து, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் திரை பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டி உள்ளனர். இதன் தமிழ்ப் பதிப்பில் சூர்யாவும், இந்திப் பதிப்பில் ஷாருக்கானும் கௌரவ வேடத்தில் நடித்திருந்தனர்.
அந்தவகையில் படத்தை பார்த்த ரஜினிகாந்த், “ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும், குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டும். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணனின் வரலாற்றை தத்ரூபமாக நடித்து படமாக்கி இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தன்னையும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்ததற்கு அவருக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும்” என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ராக்கெட்ரி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை அவர் இல்லத்தில் சந்தித்து நடிகர் மாதவன் ஆசி பெற்ற வீடியோ வைரலாகி வருகிறது. அதில், நடிகர் மாதவனுக்கு ரஜினிகாந்த் சால்வை அணிவித்துப் பாராட்டுகிறார். தொடர்ந்து ரஜினியின் காலில் விழுந்து ஆசி வாங்குகிறார் மாதவன். இந்தச் சந்திப்பின் போது நம்பி நாராயணன் உடன் இருந்தார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில், “உங்கள் இனிமையான வார்த்தைகளுக்கும் அன்புக்கும் நன்றி. அந்த வார்த்தைகள் புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது. இந்த உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைப் போலவே உங்களை நாங்களும் நேசிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
 - cini express.jpg)