நடிகர் சுஷாந்த் சிங் இறந்தது தற்கொலை அல்ல கொலை - ஆதாரத்துடன் பேசிய மருத்துவர்.. !!
பாலிவுட் உலகில் வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் சுஷாந்த் சிங் மரணத்தில் சர்ச்சை எழுந்தது.
இதற்கிடையே மும்பை போலீசார் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வந்தனர். இது குறித்து போலீசார் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரித்தனர்.
குறிப்பாக அவர் வாரிசு நடிகர்கள், பெரிய நடிகர்களின் தலையீட்டால் படவாய்ப்புகளை இழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக மும்பை போலீசார் பிரபல இயக்குனர்கள், தயாரிப்பு நிறுவனங்களிடம் கூட விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் சுஷாந்த் சிங் வழக்கை சிபிஐ விசாரித்துவந்தது. நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோக் கைது செய்யப்பட்டு 28 நாட்கள் சிறையில் இருந்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.சுஷாந்த் சிங்கின் தற்கொலை விவகாரத்தில் ஆதித்ய தாக்கரேவுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதே குற்றச்சாட்ட ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவை சேர்ந்த ராகுல் ஷெவாலே நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார்.
இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் வழக்கில் திடீர் திருப்பமாக சுஷாந்த்துக்கு உடற்கூராய்வு செய்த ரூப்குமார் ஷா என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.
சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, “சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த பொழுது கூப்பர் மருத்துவமனைக்கு 5 இறந்த உடல்கள் வந்தது. 5 உடலில் ஒன்று விஐபியின் உடல். அந்த உடலை நாங்கள் உடற்கூராய்வு செய்தபோது எங்களுக்கு அந்த உடல் சுஷாந்த்தினுடையது என்று தெரியவந்தது.
அவரது உடலில் நிறைய மார்க்குகள் இருந்தன. குறிப்பாக அவரது கழுத்தில் 2 முதல் 3 மார்க்குகள் இருந்தன. இதனைப் பார்த்தபோது என் உயர் அதிகாரிக்கு இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினேன். அப்போது முடிந்த வரை சில புகைப்படங்கள் எடுத்து பின் அவரது உடலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கும்படி அவர் எனக்கு அறிவுறுத்தினார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.