இனி ரஜினிகாந்த் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்த கூடாது..!!

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், வசந்த் ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இடம் பெறும் ரஜினிகாந்தின் 70 சதவீத காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இன்னும் 30 சதவீத காட்சிகள் மட்டுமே மீதம் இருக்கின்றன. அதில் இரண்டு பாடல் காட்சிகள் மற்றும் ஒரு சண்டைக் காட்சி ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது.
இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் , தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோயர் நடிக்கின்றனர். நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் வழக்கறிஞர் இளம்பாரதியின் சார்பில் நோட்டீஸ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பல்வேறு தளங்களில் பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரல் உள்ளிட்டவற்றை அவரது அனுமதியின்றி பயன்படுத்துகின்றன.
இது பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் ரஜினியுடைய பெயர், புகைப்படம், குரலை ஒப்புதல் இன்றி வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.