பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்!

பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான ‘தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச்’ முதல் சீசனில் பங்கேற்ற ராஜூ ஶ்ரீவஸ்தவா, அதன்மூலம் நகைச்சுவை நடிகராக அங்கீகாரம் பெற்றார். அதனைத் தொடர்ந்து ‘மைனே பியார் கியா’, ‘பாசிகர்’, ‘பாம்பே டூ கோவா’, ‘ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாயா’ உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி, ஜிம்மில் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது பயிற்சியாளர் உடனடியாக அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு இரண்டு முறை சிபிஆர் கொடுக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டார்.
அதே நாளில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ஆனால் சுயநினைவின்றி வெண்டிலேட்டர் உதவியுடன் 41 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு திரை கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்ரீவஸ்தவா, உத்தரபிரதேச திரைப்பட மேம்பாட்டு கவுன்சிலின் தற்போதைய தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.