பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி..!!
1980-களின் தொடக்கத்தில் பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் என திறமையும் தனித்தன்மையும் வாய்ந்த இயக்குநர்கள் தாங்களே வகுத்துக்கொண்ட ராஜபாட்டையில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த மாபெரும் படைப்பாளிகளின் வரிசையில் இணைந்தவர் மணிரத்னம்.

1983-ல் வெளியான பல்லவி அனுபல்லவி படத்தின் மூலம் அறிமுகமான இவர், 1985-ல் வெளியான இதயகோவில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பகல் நிலவு, மௌன ராகம், நாயகன், ரோஜா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
இவர் தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வன் என்கிற கல்கியின் வரலாற்று நாவலை தழுவிய படத்தை இயக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதில் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் படபிடிப்பு முடிந்து ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
 - cini express.jpg)