பிரபல பாடகி சுமித்ரா சென் காலமானார்..! முதல்வர் இரங்கல்
1933-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிறந்தவர் சுமித்ரா சென். இவர் மிக இளம் வயதிலிருந்தே, ரவீந்திர சங்கீத்தில் பாடம் எடுக்கத் தொடங்கினார் மற்றும் அவரது தனித்துவமான பாணிக்காக விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார்.
கடந்த 40 ஆண்டுகளாக புகழ்பெற்ற ரவீந்திர சங்கீத பாடகியாக கோலோச்சியவா் சுமித்ரா சென். ரவீந்திர சங்கீத பிரியர்களை பாதித்த அவரது மறக்கமுடியாத பாடல்களில் மேக் போலேச்சே ஜபோ ஜபோ, டோமாரி ஜர்னடலர் நிர்ஜோன், சகி பாபோனா கஹேரே போலே மற்றும் அச்சே துகோ அச்சே மிருத்யு ஆகியவை அடங்கும்.
தெற்கு கொல்கத்தாவில் உள்ள பாலிகங்கே சர்குலர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்தாா். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அவர் உடல்நிலை ஒத்துழைக்காததால் திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சுமித்ரா சென் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். இவரது மரணச் செய்தியை அடுத்து ஏராளமான பாடகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
சுமித்ரா சென் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவரின் இரங்கல் பதிவில், ‘பல தசாப்தங்களாக ரசிகா்களை ஆட்கொன்ட பாடகி சுமித்ரா சென் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக அவருடன் நெருங்கிப் பழகி வந்தேன். இசை உலகத்துக்கு அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரின் குடும்பத்துக்கும் ரசிகா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்’ என்றாா்.