அதிர்ச்சியில் படக்குழு... மோகன்லால் படத்திற்கு திடீர் தடை..!!

பிரபல நடிகர் மோகன்லால் மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு என பலமொழிகளில் நடித்து வருகிறார். இவரது திரைப்படங்கள் மலையாளத்தை தாண்டி பிறமொழிகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் 2016-ம் ஆண்டு வைசாக் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் 'புலிமுருகன்'.
இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும், அதிக வசூலையும் குவித்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மோகன்லால் மற்றும் வைசாக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. 'மான்ஸ்டர்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை அந்தோணி பெரும்பாவூர் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இயக்குனர் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை 21-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 3 நாட்களுக்கு இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.
இந்நிலையில் மான்ஸ்டர் படத்தை 'கல்ப்' நாடுகள் எனப்படும் வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மான்ஸ்டர் படத்தை அந்த நாடுகளின் தணிக்கை குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், படத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்று உள்ளதால் திரையிட அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.