நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து டி.ராஜேந்தர் வெளியிட்ட தகவல்..!!
குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை டி.ஆர் என்றும் டி.ராஜேந்தரால் சினிமாவுக்கு கொண்டு வரப்பட்டவர் தான் சிலம்பரசன். பின்னர் ஹீரோவாக அறிமுகமாகி, சிறுவயதிலேயே யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்ற நடிகர் சிம்பு, ஒரு கட்டத்திற்கு பிறகு தொடர் தோல்விப் படங்களை கொடுத்து, சினிமாவில் இருந்தே காணாமல் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்நிலையில், அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் உடல் எடையை குறைத்து நடித்தது அனைவருக்கும் ஆச்சர்யம் கொடுத்ததோடு, அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை கொடுத்தது.அதன் பிறகு, தனது ஹிட் காம்போவான இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்த வெந்து தணிந்தது காடு படமும் சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இந்நிலையில், தற்போது பத்து தல படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
மேலும் விஜயின் வாரிசு திரைப்படத்திற்காக அவர் பாடிய “தீ தளபதி” பாடலும் சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த பாடலுக்கான வீடியோவில் சிம்பு நடனம் ஆடி இருந்தது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
இந்நிலையில், சிம்புவுக்கு தற்போது 39 வயதாவதால், எப்போது திருமணம் என்று தான் அனைவரும் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அவருக்கு தகுந்த பெண்ணை கடந்த பல மாதங்களாக, அவரது பெற்றோர் தேடி வருவதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து வெந்து தணிந்தது காடு பட விழாவில் பேசியபோது, திருமணம் எல்லாம் நடக்கும்போது தான் நடக்கும் என என சிம்புவே பேசி இருந்தார்.
இந்நிலையில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர், சென்னை காஞ்சிபுரத்தில் கோவில் ஒன்றில் சிம்புவின் ஜாதகத்தை வைத்து பூஜை நடத்தியுள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சிம்பு திருமணம் குறித்து பேசினார்.
அவர் தனது பேட்டியில், “சிம்புவுக்கு ஏற்ற பெண்ணை நான் தேர்வு செய்வதை விட, என் மனைவி உஷா தேர்வு செய்வதை விட, என் இல்லத்திற்கு ஏற்ற மருமகளை இறைவன் தான் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.