'துணிவு’ படத்தில் நடிக்கிறாரா பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம்..?
அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். வரும் பொங்கலையொட்டி ஜனவரி 12-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுதவிர தொலைக்காட்சியை உரிமையை கலைஞர் டிவியும், டிஜிட்டல் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளது.
துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. துணிவு படத்தின் அப்டேட் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை முதல் இரவு வரை படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்படனர். முதல் அறிவிப்பாக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரத்தின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது.
படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் மைப்பா. இரண்டாவது அறிமுகம் பக்ஸ். இவர் ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளார். அடுத்த அறிமுகம் நடிகர் பிரேம். இவர் பிரேம் என்ற கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார். தொடர்ந்து அறிமுகம் ஜான் கொக்கன். இவர் க்ரிஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இறுதியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அஜித்தின் கதாபாத்திரம் அறிமுகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.