பிரபல நடிகைகளின் ஆடை வடிவமைப்பாளர் மர்மமான முறையில் மரணம்!! திரையுலகினர் அதிர்ச்சி
அமெரிக்காவில் பேஷன் டிசைனிங் படித்த பிரத்யுஷா காரிமெலா (35), ஐதரபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்சில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது அபார்ட்மெண்டில் வசித்து வந்தார். அவர் தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுக்கும், பாலிவுட்டில் சில நடிகர், நடிகைகளிடமும் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், பரினீதொ சோப்ரா, ஸ்ருதி ஹாசன், ஹூமா குரேஸி, ரகுல் பிரீத் சிங், வித்யா பாலன் உட்பட பலருக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய இவர், நேற்று அவரது அபார்ட்மெண்டில் உள்ள அவரது குளியலறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது அறையில் இருந்து கார்பன் மோனாக்சைடு பாட்டிலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனால், அவர் அதை சுவாசித்த காரணத்தால் உயிரிழந்திருக்கலாம் என்றும், இது தற்கொலை முடிவாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.

பிரத்யுஷா காரிமெலா உடலை கைப்பற்றிய போலீசார், உஸ்மானியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரத்யுஷா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அத்தகவலை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 - cini express.jpg)