பிரபல நடிகை மரண வழக்கில் திருப்பம் - 250 பக்க வாட்ஸ்அப் உரையாடல்களை கைப்பற்றிய போலீஸ்..!!
நடிகை துனிஷா ஷர்மா தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ படப்பிடிப்பில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். படப்பிடிப்பின் போது தேநீர் இடைவேளைக்குப் பிறகு நடிகை துனிஷா கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் கதவை உடைத்து திறக்க நேரிட்டதாக வாலிவ் போலீசார் தெரிவித்தனர்.
நள்ளிரவு 1.30 மணியளவில் படப்பிடிப்பு குழுவினர் நடிகையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடன் நடித்து வந்த ஷீசன் கான் (26) என்ற வாலிபரை காதலித்ததும், அவர்களின் காதல் முறிவே இந்த தற்கொலைக்கு காரணம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஷீசன் கானை கைது செய்தனர். நடிகை துனிஷா சர்மாவின் தற்கொலைக்கு பின்னால் மதமாற்ற முயற்சி இருப்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டபோது, அவர் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். என்னை இணை நடிகராகப் பெற்றது அவர் பாக்கியம் என சகநடிகரும், முன்னாள் காதலருமான ஷீசன் முகமது கான் பற்றி அந்த கடிதத்தில் குறிபடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் நடிகை தற்கொலை செய்து கொண்ட அந்த நாளில், இருவரும் சுமார் 15 நிமிடங்கள் மேக்அப் அறையில் பேசியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
துனிஷா சர்மா மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போலீசார் இதுவரை மொத்தம் மூன்று மொபைல் போன்களை கைப்பற்றியுள்ளனர், அவற்றில் ஒன்று ஷீசன் உடையது. அதே சமயம், குற்றம் சாட்டப்பட்டவர் துனிஷா மற்றும் அவரது தாயாருடன் வாட்ஸ்அப் சாட் செய்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். துனிஷாவின் 250 பக்க வாட்ஸ்அப் உரையாடல்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
துனிஷா எழுதிய குறிப்பில் ஒரு பக்கத்தில் ஷீசன் என எழுதப்பட்டதாகவும், மறுபுறம் ‘என்னை ஜோடி நடிகையாக பெற்றதற்கு அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்று எழுதப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. துனிஷா சர்மாவுடன் காதலில் இருந்த ஷீசன் கான் மற்றொரு பெண்ணுடனும் தொடர்பு வைத்திருந்தார். துனிஷா தற்கொலை செய்து கொண்ட அன்று, ஷீசன், ரகசிய காதலியுடன் 2 மணி நேரம் போனில் பேசியதாக கூறப்படுகிறது. ரகசிய காதலி ஷீசனுக்கும் இடையிலான அரட்டைகள் மொபைலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது அதை மீட்டெடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், நடிகை மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷீசன் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. அவர் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை. மேலும் ஷீசனும் தொடர்ந்து தனது அறிக்கைகளை மாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார்.