பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி காலமானார்..!!

 
1

இந்தியாவில் 80 மற்றும் 90-களில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்திய இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக மருத்துவமனையில் இருந்த லஹிரி நேற்று முன்தினம் (பிப். 14) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து மும்பை கிரிட்டிகேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பப்பி லஹிரி 1973-ம் ஆண்டு ‘நன்ஹா சிகாரி’ என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் 1985-ம் ஆண்டு வெளியான பாடும் வானம்பாடி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் பப்பி லஹிரி என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web