பிரபல பாடகர் பூபிந்தர் சிங் காலமானார்!! திரையுலகினர் இரங்கல்..!!

பிரபல பாடகர் பிந்தர் சிங் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்த பூபிந்தர் சிங், முதலில் அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். தனது தந்தை நாதா சிங்கிடம் இசைப் பயிற்சி பெற்ற அவர், சில ஆண்டுகள் டெல்லி தூர்தர்ஷனில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளில் பாடினார்.
அதன்பின், பழம்பெரும் இசையமைப்பாளர் மதன் மோகன் பூபிந்தர் இசையில் வெளியான ‘ஹகிகட்’ படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். இந்தி மட்டுமின்றி பிற இந்திய மொழிகளிலும் பாடியுள்ளார். ‘மௌசம்’, ‘சட்டே பே சத்தா’, ‘அஹிஸ்தா அஹிஸ்தா’, ‘துரியன்’, ‘ஹகிகத்’ மற்றும் பல படங்களில் அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இளையராஜாவின் இசையில் மகேந்திரன் இயக்கத்தில் 1981-ம் ஆண்டு வெளிவந்த 'நண்டு' படத்தில் இடம் பெற்ற 'கைசே கஹுன்' என்ற பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து பூபிந்தர் சிங் பாடியுள்ளார். 'நண்டு' படத்தில் இடம் பெற்ற 'அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா…., 'மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே…' ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள். இப்போதும் இளையராஜா ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இடம் பெற்றவை.
பாடுவதைத் தவிர, அவர் பல பாடல்களுக்கு கிட்டார் மற்றும் வயலினும் வாசித்துள்ளார். பூபிந்தர் வங்காளதேச பாடகியான மிதாலி சௌத்ரியை, 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். மேலும், பூபிந்திரவும், மிதாலியும் இணைந்து பல கஜல்கள் மற்றும் செமி கிளாசிக்கல் பாடல்களை வெளியிட்டனர்.
அந்தேரியில் உள்ள மருத்துவமனையில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஜூலை 18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மனைவி மிதாலி ஊடகங்களிடம் உறுதியளித்தார். அவரது மறைவுக்கு பல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பூபிந்தர் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பல தசாப்தங்களாக மறக்கமுடியாத பாடல்களை வழங்கிய பூபிந்தர் சிங் மறைவு வேதனை அளிக்கிறது. அவரது படைப்புகள் பலரையும் கவர்ந்தன. இந்த சோகமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
Anguished by the passing away of Shri Bhupinder Singh Ji, who has given memorable songs for decades. His works struck a chord with several people. In this sad hour, my thoughts are with his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) July 18, 2022