சோகம்..! வைகைப்புயல் வடிவேலு தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்..!
தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு, நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர்.
1988-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘என் தங்கை கல்யாணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் வடிவேலு. அதனைத் தொடர்ந்து ‘என் ராசாவின் மனசிலே’, ‘சின்ன கவுண்டர்’, ‘அரண்மனை கிளி’ படங்களில் நடித்து தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டார். அவரது உடல் அசைவும், மொழி ஆளுமையும் தமிழ் சினிமாவில் கதாநாயகன்களுக்கு இணையான இடத்தை வடிவேலுக்குப் பெற்றுத் தந்தது.
காமெடி நடிகராக அறிமுகமான வடிவேலு அதன் பின் ஹீரோவாக பல படங்களில் நடித்தார். கொரோனா காலத்தில் திரையுலகில் இருந்து நடிகர் வடிவேலு விலகியிருந்தார். இந்த நிலையில் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் மூலம் நடிகர் வடிவேலு தற்போது ரீஎண்டரி கொடுத்துள்ளார்.
சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்றாலும், தன் சொந்த ஊரான மதுரையில் குடும்பத்தினருடன் நடிகர் வடிவேலு வசித்து வந்தார். இந்த நிலையில் உடல் நலம் குன்றியிருந்த வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி நேற்று இரவு காலமானார். தனது தாய் மீது ஈடற்ற பாசம் வைத்துள்ள நடிகர் வடிவேலு இதனால் கதறி அழுதார். அவருக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர். அத்துடன் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.