ஷகீலா பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு திடீர் தடை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!
மலையாளத்தில் வெளியாகியிருந்த ஒரு அடார் லவ் என்ற திரைப்படம் இந்திய அளவில் ஹிட்டான நிலையில், அந்த படத்தை இயக்கிய ஓமர் லுலு தற்போது “நல்ல சமயம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெறவிருந்தது.
இதில் பிரபல நடிகையான ஷகீலா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை அங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், நடிகை ஷகிலா பங்கேற்பதாக இருந்தால் அனுமதிக்க மாட்டோம் என்று வணிக வளாக நிர்வாகிகள் திடீரென மறுத்துள்ளனர்.
இது கேரளா சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து இதுபற்றி ஷகிலா அளித்த பேட்டியில், தனக்கு இது போன்ற சம்பவங்கள் நடப்பது ஒன்றும் புதியது கிடையாது என்றும், எதற்காக அனுமதி மறுக்கப்படுகிறது என்பது தனக்கு புரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே வணிக வளாகத்தினர் நடந்த சம்பவம் குறித்து அளித்துள்ள விளக்கத்தில், “நடிகை ஷகிலாவிடம் நாங்கள் எந்த பாகுபாடும் காட்டவில்லை. தனிப்பட்ட சில காரணங்களால் பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சிக்கு நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்தோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் விசாரிக்கையில், டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவிருந்த இதே வணிக வளாகத்தில், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பாக சினிமா நிகழ்ச்சி ஒன்று நடந்தபோது, அதில் பங்கேற்றவர்களிடம் ரசிகர்கள் தவறாக நடந்து கொண்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, இந்த விவகாரத்தில் வணிக வளாக நிர்வாகிகளை போலீசார் எச்சரித்து அனுப்பியதால் தான், தற்போது ஷகிலா பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகை ஷகீலா தான் சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில், ஆபாச படங்களில் நடித்து வந்தார். அவரது படங்களுக்கு மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன் லால் போன்ற நடிகர்களின் படங்களுக்கு இணையாக வரவேற்பு அப்போது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.