பிரபல நடிகை பார்வதி நாயருக்கு கொலை மிரட்டல் விடுத்த சுபாஷ் சந்திரபோஸ்..? யார் இவர் ? 

 
1

2012-ல் வெளியான ‘பாப்பின்சு’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அதனைத் தொடர்ந்து 2014-ல் வெளியான ‘நிமிர்ந்து நில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், நிமிர், சீதக்காதி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டில் இருந்து விலை உயர்ந்த கை கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கடந்த மாதம் 15ஆம் தேதி திருடு போனதாக சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் வீட்டில் பணிபுரிந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்தான் திருடியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

Parvathy-Nair

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பார்வதி நாயர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்தார். அதில் தான் ஏற்கனவே கொடுத்த புகாரின் மீது வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் சுபாஷ் தனக்கே தெரியாமல் போட்டோக்களை எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் 20 ஆம் தேதி தான் புகார் அளித்ததாகவும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் இளங்கோ, சுபாஷ் சந்திரபோஸ், விஜய், அமல் ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். அந்த 4 பேரில் சுபாஷ் தன் மீது வதந்திகளை பரப்பி வருவதாகவும் தனிப்பட்ட முறையில் தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சுபாஷ் அளித்து வரும் பேட்டிகளில் தன்னைப் பற்றி தவறான தகவல்களை கூறி வருவதாகவும் தனது சினிமா வளர்ச்சியை பிடிக்காத யாரோதான் சுபாஷை இப்படி தூண்டி விடுகிறார்கள் என்றும் கூறினார். ஆனால் இதனை மறுத்துள்ள சுபாஷ், தன் மீது நடிகை பார்வதி நாயர் பொய்யாக திருட்டு பட்டம் கட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் பார்வதி நாயரின் வீட்டில் நடந்த ஒரு விஷயத்தை தான் பார்த்து விட்டதாகவும் அதை வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்காகதான் பார்வதி நாயர் தன் மீது பொய்யான புகார்களை அளித்து வருகிறார்.

Parvathy-Nair

அந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று அன்றே மிரட்டினார் என்றும் பார்வதி நாயர் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். அதை காவல் ஆணையரிடம் காட்டியிருப்பதாகவும் தேவைப்படும் போது அனைத்தையும் வெளியில் விடுவேன் என்றும் கூறினார். இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் அளித்த இரண்டாவது புகார் மீதும் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ள பார்வதி நாயர், தனது புகைப்படத்தை பொது வெளியில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். பார்வதி நாயருக்கும் அவரது பணியாளருக்கும் இடையிலான மோதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இருவரும் ஒருவர் மீது ஒருவர் கூறி வரும் குற்றச்சாட்டுக்களும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

From Around the web