நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்டது முட்டாள்தனமான செயல்..!!

 
1

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷன், அதிர்ஷ்ட தேவதை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. 

இந்த நிலையில் தர்ஷன் நடித்து உள்ள ‘கிராந்தி’ படம் அடுத்த மாதம் (ஜனவரி) 26-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நடந்தது. இதில் தர்ஷனின் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு வாலிபர் தனது செருப்பை கழற்றி தர்ஷன் வீசினார். அந்த செருப்பு தர்ஷனின் தோள் பட்டையில் பட்டு கீழே விழுந்தது.

darshan

அதிர்ஷ்ட தேவதை குறித்து தர்ஷன் சர்ச்சை கருத்துகளை தெரிவித்ததால், மறைந்த நடிகர் ஒருவரின் ரசிகர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு கன்னட திரைஉலகினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். 

இந்த நிலையில் நடிகர் கிச்சா சுதீப் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘நமது நிலம், மொழி மற்றும் கலாசாரம் அனைத்தும் அன்பு மற்றும் மரியாதையை பற்றியது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உள்ளது. ஒவ்வொரு தீர்வுக்கும் பல வழிகள் உள்ளன. ஒவ்வொரு நபரும் கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கு தகுதியானவர். எந்த பிரச்சினையும் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும்.

தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட வீடியோவை பார்க்க கவலையாக இருந்தது. அந்த சம்பவத்தின் போது படத்தின் நடிகை, படக்குழுவினரும் மேடையில் நின்று கொண்டு இருந்தனர். தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்டது படக்குழுவினரையும் பகிரங்கமாக அவமானப்படுத்துவது போன்றது ஆகும். இத்தகைய செயல்களுக்கு கன்னடர்களாகிய நாம் பெயர் பெற்றவர்களா?. 


 


தர்ஷன் மீது செருப்பு வீசிய வாலிபரின் செயலை, மறைந்த நடிகர் பாராட்டி ஆதரித்து இருப்பாரா?. அந்த ரசிகரின் முட்டாள்தனமான செயல், பிற ரசிகர்களின் அன்பு, கண்ணியம், மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்த கூடாது. கன்னட சினிமாவுக்கு தர்ஷன் அளித்த பங்களிப்பை புறக்கணிக்க முடியாது. நமது மாநிலம் மீது மற்ற மாநிலங்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை கெடுக்கும் வகையில் இதுபோன்ற செயலில் ஈடுபட கூடாது. நடிகர்கள், ரசிகர்கள் இடையே வேறுபாடுகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு அமைச்சர் சுதாகரும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் கண்டனத்திற்கு உரியது. கலைக்கும், கலைஞர்களுக்கும் உயர்ந்த இடம் கொடுப்பது நமது கன்னட கலாசாரம். கன்னடர்களின் மனதை புண்படுத்தும் இதுபோன்ற செயல்கள் இனி நடக்க கூடாது என்று கூறியுள்ளார்.

From Around the web